தமிழில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாமலும், ஆங்கில இலக்கணத்தில் சரியாக எழுத தெரியாமலும், விரிவுரையாளர்கள் கற்பிப்பதை புரிந்துகொள்ள முடியாமையாலும் வருந்துகின்ற என் நண்பர்களுக்காகவும், ஆங்கிலம் தமிழின் மூலம் கற்க விரும்பும் இனிய அன்பர்களுக்காகவும் இத்தளத்தினை வடிவமைத்துள்ளோம்.
உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக விளங்கும் ஆங்கிலத்தினை கற்க வேண்டிய அவசியமும் நமக்கு ஏற்பட்டுள்ளது. இத்தளத்தின் பாடத்திட்டங்கள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஆங்கில வாக்கியத்திற்கு தமிழாக்கமும் கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு புரிந்துகொள்வதற்கு மிக எளிதாக இருக்கும். நீங்களே வாக்கியம் அமைக்கவும், எளிதாக பேசவும் இயலும்.
நீங்கள் ஆங்கிலத்தில் சரியாக பேசவேண்டுமென்றால் உரத்த குரலில் சரியான உச்சரிப்புடன் பேசி பழகுங்கள், சரியோ தவறோ தைரியமாக பேசுங்கள், பிழையின்றி பேச தொடர்ந்து பேசி பேசி பழகுங்கள். பேச பேச 'நா' உச்சரிப்பு தெளிவாகவும், 'நா' குளறாமல் வரும். நிறைய மாணவர்கள் வினைச்சொல்லை பயன்படுத்தும்போது சிரமப்படுகிறார்கள். அந்த சிரமத்தினை இந்த பாடத்திட்டம் போக்கும்.
பாடங்களை புரிந்துகொண்டும், வாக்கியங்களை தெரிந்துகொண்டால் மட்டும் இந்த பாடதிட்டத்தினை நிறைவு செய்தது ஆகா. ஒவ்வொரு வாக்கியத்தினையும் சரளமாக பேசும்வரை பயிற்சி அவசியம். சரி, வாருங்கள் பாடத்திற்கு செல்வோம்...
ஆங்கில இலக்கணத்தில் சொல்லின் வகைகள் (Parts of Speech) உள்ளன.
அவையவன :
1. Noun (பெயர்ச்சொல்)
2. Pronoun (மறுபெயர் (அல்லது) பிரதிபெயர்)
3. Verb (வினைச்சொல்)
4. Adjective (பெயர் உரிச்சொல்)
5. Adverb (வினை உரிச்சொல்)
6. Preposition (முன்னிடைச்சொல்)
7. Conjunction (இணை இடைச்சொல்)
8. Interjection (வியப்பிடைச்சொல்)
சொல்லின் வகைகள் என்றால் என்ன? இவற்றினை எவ்வாறு பயன்படுத்துவது? எங்கே பயன்படுத்துவது என்று தெளிவாக படித்து புரிந்துகொண்டுவிட்டால் வாக்கியத்தினை அமைப்பதும், பேசுவதும் எளிது.
எல்லாவற்றினையும் நாம் அடுத்து வரும் பாடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தெளிவாக கற்போம். அதற்கு முன்பு காலம் என்றால் என்ன? வினைச்சொல் என்றால் என்ன? அவற்றின் பயன்பாடுகளை காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக